Monday, April 11, 2011

ஏப்ரல் 13 ன் கதாநாயகர்களுக்கு !

ஒரு நாள் கதாநாயகர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீங்கள் ஏற்கப் போகும் அந்த ஒரு நாள் கதாபாத்திரம் தான் அடுத்த 5 ஆண்டுகள்( நிபந்தனைக்கு உட்பட்டது ) நம் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது . நாம் , ஜனநாயக நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்மை நம்ப வைப்பது தேர்தல் மட்டுமே . மிச்சம் இருக்கும் அந்த ஒரே ஒரு உரிமையை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்துத் தான் நம் வெற்றியும் தோல்வியும் இருக்கப் போகிறது . நாம் பெறப்போகும் வெற்றி நமது வெற்றி மட்டுமல்ல ஜனநாயகத்தின் வெற்றி . நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை இந்த முறை தேர்தல் ஆணையம் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது . இனி, நம் ஓட்டில் தான் உள்ளது நம் ஜனநாயகம் . 

ஒரு சில பேர் ஓட்டே போடாமல் வில்லன்களாக மாறலாம் என்று நினைக்கிறார்கள் . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , "எல்லோரும் ஊழல்வாதிகள் அவர்களுக்கு ஏன் ஒட்டு போட வேண்டும் " , " நான் ஒட்டு போடாமல் இருப்பதால் பெரிதாக ஒன்றும் நடந்து விடாது" , "என் தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும் " என்ற சுயநல மனநிலை தான் நம் வில்லன்களுக்கு இருக்கிறது . இந்த மனநிலை , படித்தவர்களுக்குத் தான் அதிகமாக உள்ளது . அதற்கு காரணம் நல்ல படிப்பு , நல்ல வேலை , நல்ல சம்பளம் . சம்பாதிக்கும் பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் , யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழலாம் என்ற மனநிலை தான் . இவர்களுக்கு ஓட்டுப் போடுவதெல்லாம் பெரிய விசயமில்லை . பெரு நகரங்களில் வேலை பார்க்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளின் நிலை வேறு மாதிரி இருக்கிறது . அரசியல் சூழ்நிலைகள் தெரியும் , ஓட்டுப் போடவும் ஆசை இருக்கும் . ஊருக்கு போய்வரும் செலவுக்காகவும் , ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்க்காகவும் ஓட்டுப் போடுவதையே தவிர்க்க நினைக்கின்றனர் . 

நம் வில்லன்கள் ( ஓட்டுப்போட விருப்பம் இல்லாதவர்கள் ) ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . மனிதன் எப்போதுமே ஒரு சமுதாய விலங்கு தான் . மற்றவர்களைச் சாராமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது . நாம் எதிர் பார்க்கும் மாற்றத்தை நம்முடைய பங்களிப்பு இல்லாமல் எக்காலத்திலும் கொண்டு வர முடியாது . ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தால் அவர்களுக்கு எதிராக ஓட்டைப் பதிவு செய்யுங்கள் . குடும்ப அரசியல்  பிடிக்க வில்லையா ? அந்த குடும்பத்தில் இருந்து எத்தனை பேர் தேர்தலில் நின்றாலும் ஒருவருக்கு மட்டும் ஓட்டுப் போடுங்கள் . மற்ற யாருக்கும் ஒரு ஓட்டு கூட பதிவாக கூடாது . மிகச் சிறந்த முறையில் மக்கள் பணி செய்யாத யாரும்  இரண்டு முறைக்கு மேல் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட அனுமதிக்காதீர்கள்  . 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் நிற்பது பிடிக்கவில்லையா ? அவர்கள் யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள் . இதையெல்லாம் தவிர்த்து யார் மிஞ்சுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் . நீங்கள் எதிர் பார்க்கும் மாற்றம் நிகழும் . ஆனால் , ஓட்டே போடா  விட்டால் நாம் எதிர் பார்க்கும் எந்த மாற்றமும் எக்காலத்திலும்  நிகழாது .

கதாநாயகர்கள் கவனிக்க , எந்த கட்சியைச் சார்ந்தும் , எந்தக் கட்சி தலைவருக்காகவும் , சாதிக்காகவும் , மதத்துக்காகவும் , கவர்ச்சியான பேச்சுக்காகவும் , பணத்துக்காகவும்  ஓட்டுப் போடாதீர்கள் . அப்படிப் போடுவதால் உங்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை . உங்கள் தொகுதியில் நிற்பவர்களை   மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள் . அவர்களில் எந்த வேட்பாளர்  , எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  உங்களது நிலைகளை புரிந்து உங்களுக்கு நல்லது செய்வாரோ அவருக்கு ஓட்டுப்போடுங்கள் . நாட்டை ஆள்வது யாராக இருந்தாலும் நம் தொகுதி நலன்களுக்காக போராடுபவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . இலவசத்தை  மறந்து விடுங்கள் ,ஏனெனில்  இலவசங்கள் அனைத்துமே நம் வரிப்பணம் . 

யாருமே நல்லது செய்யாவிட்டாலும் கூட தொடர்ந்து இரண்டு முறை எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வரக்கூடாது . ஆட்சி மாற்றம் ஒன்று மட்டுமே ஊழல்வாதிகள் மனதில் சிறிதளவாவது பயத்தை உண்டாக்கும் . மத்திய அரசை எடுத்துக் கொள்ளுங்கள் , கடுமையாக  விலைவாசி உயர்ந்த நிலையிலும் தொடர்ந்து மீண்டும்  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது . அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் இன்று , நாம் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் . கோடிகளில் இருந்த ஊழல்  இலட்சம் கோடிகள் என்று ஆனது தான் மிச்சம் . ஒரே கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல்களும் , ஊழல் தொகைகளும்  மட்டுமே உயரும் . நம்  வாழ்க்கைத்தரம்  உயராது , குறைய மட்டுமே செய்யும் . காங்கிரஸ் இருக்கும் வரை இந்தியாவில் ஒட்டு மொத்த வளர்ச்சி எங்குமே இருக்காது . பணம் படைத்தவர்களின் வளர்ச்சி மட்டுமே இருக்கும் .

 காமராஜர் செத்த போதே காங்கிரசும் செத்து விட்டது . உண்மையான இந்தியனாக இருந்தால் இனி எக்காலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போடாதீர்கள் .அதனால் , மக்களே , மக்களுக்கு மக்களே  அடுத்த 5 ஆண்டுகள் நம் வாழ்க்கை கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் தற்போது இருக்கும் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது . அதன் பிறகு உங்க விருப்பம் . ஆனால் , எதற்காகவும் ஓட்டுப் போடாமல் இருக்காதீர்கள் .
           
 60 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு ( கட்சித் தலைவராகவே இருந்தாலும் ) ஓட்டுப் போடாதீர்கள்....

கட்சி சார்ந்த அரசியலைத் தூக்கி எறிவோம் , மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் ...

மேலும் படிக்க : 


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms