Wednesday, February 29, 2012

உனக்காக எல்லாம் உனக்காக ..!

தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்களாக இருப்பவை சந்திரபாபுவின் பாடல்கள் .அவரது பாடும் தொனியும் ஆடும் நடனமும் அலாதியானது .அந்த வரிசையில் " உனக்காக எல்லாம் உனக்காக.." பாடலுக்கு தனி இடம் உண்டு . விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த " புதையல் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . பொதுவுடைமை பாடல்கள் மட்டுமல்ல அற்புதமான காதல் பாடல்களையும் எழுதியவர் தான் பட்டுக்கோட்டையார் .

அந்தப்பாடல் :



பாடல் வரிகள் :

உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக ( உனக்காக…)

பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? _ இல்லே
பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா?
துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா? _ சொல்லு
சோறுதண்ணி வேறுஏதுமில்லாமெக் கெடக்கணுமா?

இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தைஇங்கேருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் _ இடி
மின்னல்மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன் (உனக்காக…)

என்னே காதல் ததும்பும் வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம் 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது ! 
.................................................................................................................................................................... 

Saturday, February 25, 2012

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !

அதிகார மையத்தின் கைகள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகின்றன . என்ன தப்பு செய்கிறார் என்பது முக்கியமல்ல , யார் தப்பு செய்கிறார் என்பது தான் முக்கியமாகப் போய்விட்டது . சமூகத்தில் நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்தே நமது தப்புக்குத் தண்டனை . மற்றபடி நீதி ,நியாயம் ,சமதர்மம் என்பதெல்லாம் மண்ணை விட்டு மறைந்தே போய் விட்டது போல தோன்றுகிறது .ஆறறிவு சமூகத்தின் மிகப்பெரிய அவலம் இது . அதிகார வர்க்கம் செய்யும் அனைத்து செயல்களையும் நியாமாக்குவது தான் ஊடகங்களின் முதல் வேலையாகிவிட்டது . எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தான் சாதாரண மனிதனின் ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது .

சென்னையில் இரண்டு வங்கிகளில் கொள்ளையடித்தவர்களில்  5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் . காரணம் , மக்களின் பணத்தில் சில லட்சங்கள் அவர்களால் திருடப்பட்டுள்ளது . அதற்கு தண்டனை மரணம் . என்னிடம் இருப்பது ஒரே கேள்வி தான் . மக்கள் பணத்தில் சில லட்சங்கள் திருடியவர்களுக்கே தண்டனை  மரணம் என்றால் மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை ?

திருடுவது சரி என்று நான் சொல்லவில்லை .யார் திருடினாலும் தப்பு தப்பு  தான் .தண்டனையும் தேவை தான் .ஆனால் , தண்டனை என்று வரும் பொழுது எளிய மனிதன் தான் அதிகம் பாதிக்கப்படுகிறான் . அதிகாரவர்க்கம் எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் என்றுமே தண்டனை அனுபவித்ததில்லை . இதே 35,00,000 ரூபாய் மக்கள் பணத்தை ஒரு அரசியல்வாதி திருடிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம் . திருடப்பட்டது மக்கள் பணம் என்று கொதித்து எழும் காவல் துறை அந்த அரசியல்வாதியை  உடனே சுட்டுக்கொல்லுமா ?

வங்கிகளில் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக செயலாற்றிய காவல்துறை மற்ற கொள்ளைக்காரர்களுக்கு ( அரசியல்வாதிகள் இன்னும் பலர் ) எதிராக எப்போதும் பொங்காமலே இருப்பது ஏன் ? இரண்டு பிரிவிலும் திருடப்படுவது மக்கள் பணம் தான் . எந்த வித அடையாளமும் இல்லாத மனிதன் திருடும் போது அவனுக்கு கிடைக்கும் பரிசு மரணம் . பல்வேறு அடையாளங்களுடன் ( கட்சி ,பதவி ,அதிகாரம் இன்னும் பல ) திருடுபவர்களுக்கு கிடைக்கும் பரிசு புகழ் ( இன்னும் பல. ஆனால் ,கண்டிப்பாக மரணம் கிடைக்காது !?) . ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு ???

 அப்ப ,என்ன தப்பு செய்கிறார் என்பது முக்கியமல்ல ,யார் தப்பு செய்கிறார் என்பது தான் முக்கியம் .அப்படித் தானே .இதைத் தட்டிக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊடகங்கள் ,  கேள்வி கேட்பதற்கு பதிலாக அதிகாரவர்க்கத்தைப்    பாராட்டவே செய்கின்றன .என்ன கொடுமை இது ? நீதி செத்துப்போன இடத்தில் ஊடகங்கள்  மட்டும் உயிரோடவா இருக்கும் .

 இந்தத் திருட்டுக்காக 5 பேர் கொல்லப்பட்டது .சந்தேகமே இல்லாமல் நம் சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !

அடுத்த தடவ பேருந்துல போகும் போது டிக்கெட் எடுக்க மறந்துடாதிங்க , ஏன்னா உங்களையும் என்கவுன்டர்ல போட்டாலும் போட்ருவாங்க !? சூதானமா இருங்க !

Wednesday, February 22, 2012

மரங்களை வெட்டுங்கள்!!

காட்டு கருவேல மரம் ,சீமை கருவேல மரம் மற்றும் சீத்தை மரம் ( இவை அனைத்தும் ஒரே மரத்தின் வேறு பெயர்களா ? தெரியவில்லை ) நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்கள் . ஆனால் , தமிழ்நாட்டில் இந்த மரங்கள் தான் எங்கெங்கு காணினும் நீக்கமற நிறைந்திருக்கின்றன . இவை அழிக்கப்படுவதின் அவசியத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது .இந்தக் கட்டுரையை நிறைய பேர் படித்திருக்கலாம் .இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி  படிக்காதவர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .இது என் சொந்த கட்டுரை அல்ல . இரவல் கட்டுரை .

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன் :

 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )


நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே' ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள் :

 
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம் :

 
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு :

 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

 
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம் :

 
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் .இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
 

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக்கச்  சொல்லுங்கள்.
 

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! 

நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! 

பின்குறிப்பு :
அறிவியல் படி பார்த்தால்  இந்த மரங்கள் தமிழ்நாட்டின் வெற்றியாளர்கள் தான் . எத்தனையோ வகையான மரங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்  இந்த வேளையில் இவை தங்களின் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன . வலுத்தது நிலைக்கும் !

மேலும் படிக்க :

 நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ? 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
..................................................................................................................................................................... 

Sunday, January 29, 2012

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம்

1940 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் தோன்றிய இசை வடிவம் தான் ராக் அண்ட் ரோல் ( Rock & Roll or Rock 'n' Roll ) . ஆப்பிரிக்க இசையும் அமெரிக்க இசையும் கலந்து தான் " ராக் அண்ட் ரோல் " உருவானதாக சொல்லப்படுகிறது . இந்த இசை வடிவத்தில் முதலில் பியானோ அல்லது  சாக்ஸபோன் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது . பிறகு கிட்டார் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டது .1960 குப்  பிறகு தான் இந்த இசை வடிவம் பெரிய அளவில் புகழ் பெற்றதாம் . 

1958 ஆம் ஆண்டு வெளிவந்த பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர் . இந்தப்பாடலை எஸ் .சண்முகசுந்தரம்  மற்றும் ஆர் .கணேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் . சந்திரபாபு இந்தப்பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார் . என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் , இந்தப் பாடலை எழுதியிருப்பவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது தான் . 

 பாடல்  வரிகள் : 

1-வது ஆள் : ஒன்… அண்ட்டூ… அண்ட்த்ரீ… அண்ட்போர்
2-வது ஆள் : தைதைதை… தை… தை… தை… தை… தை
1-வது ஆள் : ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் (ராக்…
இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ் தை… தை… தை… தை…
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டேன்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டேன்ஸ் ஜோடி டேன்ஸ்
பாடி பியூட்டிகள் பப்ளி சிட்டிகள்
பாடி ஆடிடும் டேன்ஸ்!

2-வது ஆள் : ஆடினார் அன்றே ஆடினார்
தில்லை அம்பலத்தே நின்று
அரகரனாம் திருநடன சபேசன்
ஆடினார் அன்றோ!
அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் (அன்றே…)

1-வது ஆள் : ஸார்… ஸார்… ஸார்… டோண்டு ஒரி ஸார்
பார்… பார்… பார்… வேலைகளைப் பார்
பாய்… பாய்… பாய்… படேபடே பாய்
ரார்… டீடி… ராட்டி… டா
கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…
கலை… கலை… கலை!

2-வது ஆள் : கோபியர் கூடவே காவினி லாடிடும்
குறும்புக்காரன் கோபலன் நந்தபாலன்
குழலோசை கேட்காத குறைசெய்த காது
குறைந்தென்ன வளர்ந்தென்ன
ஒன்றுக்கும் உதவாது!

1-வது ஆள் : ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல்

" கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!  லவ்வுலே  மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!  வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…கலை… கலை… கலை! " என்ன அருமையான வரிகள் .

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 
..................................................................................................................................................................

Saturday, January 21, 2012

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நியூட்ரினோ என்பது மின்சுமை இல்லாத ஒளியை விட வேகமாக(?) பயணிக்கும் துகள் என்று சொல்லப்படுகிறது . இது , மின்காந்த அலைகள் மற்றும் வேறு எந்தத் துகள்களாலும் பாதிக்கப்படாமல் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது . நியூட்ரினோக்கள், இயற்கையான முறையில் சூரியனில் நடைபெறும் வேதியல் மாற்றங்களால் கிடைக்கின்றன . செயற்கையான முறையில் அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் கதிர்கள் மூலமாக அணுவைத் தாக்குவதன் மூலமாகவோ நியூட்ரினோக்களை உருவாக்க முடியும் .ஆனால் , இது மிகவும் கடினம் மற்றும் ஆபத்து அதிகம் . அதனால் , சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்யவே உலகெங்கும் நியூட்ரினோ ஆய்வுமையங்கள் அமைக்கப்படுகின்றன . இதுவும் எளிதல்ல .


நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவான விதத்தையும் , சூரியனின் ரகசியங்களையும் அறியமுடியும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள் . மேலும் இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் . இவர்களால் நம்பிக்கை மட்டுமே தெரிவிக்க முடியும் . ஆனால் , முடிவு எப்போதும் இயற்கையின் கையில் .

மூன்று விதமான நியூட்ரினோக்கள் :
                         Electron நியூட்ரினோ ( ne), Muon நியூட்ரினோ( nm) மற்றும்  Tau நியூட்ரினோ( nt)  என்று மொத்தம் மூன்று விதமான நியூட்ரினோக்கள் இருக்கின்றன .

Neutrino ne nm nt
Charged Partner electron (e) muon
(m)
tau
(t)

1930  ஆம் ஆண்டிலிருந்தே நியூட்ரினோ பற்றிய ஆய்வுகள் தொடங்கி விட்டன . ஆனால் இன்றுவரை பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை . நியூட்ரினோ துகள்களுக்கு எடை உண்டு என்று மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது .ஜப்பான்ல வச்சிருக்காக ,அமெரிக்கால வச்சிருக்காக அதனால நாமும் ஒன்ன உண்டு பண்ணலாம் என்று நெடு நாட்களாக இந்தியா முயற்சித்து வருகிறது . இதற்கு  முன்பு வடமாநிலத்தில் ஏதோ ஒரு இடத்தில் அமைய இருந்ததும் , நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் அமைய இருந்ததும் இயற்கை ஆர்வலர்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது . அதனால்   கோலார் தங்க வயலில் நியூட்ரினோ  ஆய்வுமையம் செயல்பட்டு வந்தது . இதுவரை எவ்வளவு பணம் செலவளிக்கப்பட்டுள்ளது ? என்ன கண்டுபித்திருக்கிறார்கள்  ? என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை .


இந்தநிலையில் தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது . இதற்கு தேவாரம் பகுதி மக்கள் கடந்த ஆண்டே எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் , பெரிய போராட்டமாக முன்னெடுக்க முடியவில்லை . கண்டிப்பாக ஆய்வு மையம் அமையும் இடத்தில் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் . இந்தப்பாதிப்பு இன்னொரு " தானே " புயல் போல ஏதோ ஒரு வடிவத்தில் பூமியைப் பாதிக்கும் . இயற்கையின் அடி வலிமையாக மட்டுமே இருக்கும் .
இந்திய மூளைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்றே வைத்துக்கொள்வோம் . இவர்களை ஜப்பான் அல்லது அமெரிக்காவிற்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து ஆய்வுகளை நடத்தச் சொல்லலாமே . அதை விடுத்து புதிதாக ஆய்வு மையம் அமைப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் அதிகளவு விரையமாகப்  போகிறது .மலையைக் குடைவதன் மூலமும் , சுரங்கம் அமைப்பதன் மூலமும் இயற்கை சூழலும் , சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படும் .


இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு ஏற்பட்டதன்  விளைவாக  மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.  


அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ந்து இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது ஒரு கூட்டம் . இன்று உலகில் கோடிக்கணக்கான ஆலைகள் மற்றும் ஆய்வு மையங்கள்  உள்ளன . ஆலையின் கழிவுகள் நுண்ணுயிரிகளை அதிகம் பாதிக்கின்றன . இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாத கழிவுகளை வெளியிட எந்த அறிவியல் முறையாலும் முடியவில்லை . அதே வேளையில் இயற்கையில் கழிவு என்பதே இல்லை . இயற்கையின் கழிவு மற்றொரு உயிரினத்தின் வளர்ச்சிக்கு ஊட்டமாக மாறுகிறது .  

" இடுப்பு வேட்டிக்கு வக்கில்லையாம் ; இதுல இன்டர்நெட் கனெக்சன் கேட்குதாம் " என்று சுஜாதா வேடிக்கையாக சொன்னது போல, " சோத்துக்கே வழியில்லையாம் (இந்தியாவில்  வாழும் 40 % சதவீத மக்களுக்கு இன்னும் சரியான உணவு கிடைத்தபாடில்லை ) ; இதுல நியூட்ரினோ  ஆய்வுமையம் கேட்குதாம் " .

மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

...................................................................................................................................................................

Saturday, January 7, 2012

ஒற்றையடிப் பாதை !


ரயிலில் பயணிக்கிறேன்
சிறியதும் பெரியதுமாக
நீளமும் குட்டையுமாக
குறுக்கும் நெடுக்குமாக
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகள்
நினைவூட்டுகின்றன
முன்பு நான் நடந்த
ஒற்றையடிப் பாதைகளின்
பாதையோரப் புற்களையும்
நான்கு பனைமரங்களுக்கு
அருகில் இருந்த
ஒரே நுங்கு மரத்தையும்
குளக்கரையையும்
பூவரசமர நிழலையும்
பலமுறை பார்த்த
வேறு வேறு பாம்புகளையும்
முள் தைத்து மிதிவண்டி
பஞ்சர் ஆனதையும்
அடைமழை காலத்தில்
பாதையின்  குறுக்கே இருந்த
ஓடையில் வந்த வெள்ளத்தையும்
தூக்கிபிடித்த பிறகும் கூட
டவுசரின் ஓரத்தை
நனைத்த வெள்ளத் தண்ணீரையும்
ஓடையை ஒட்டியிருந்த
நாவல்மர பழத்தின்
மறக்க முடியாத சுவையையும்
வாழ்க்கையைப் போலவே
பள்ளத்தையும் மேடையும்
கூடவே
ஒற்றையடிப் பாதைகளை
மறந்த என் நிகழ்காலத்தையும் !

மேலும் படிக்க :

நிலவே நீ ஒரு ...!

மெதுவான எளிய வாழ்க்கை !
.................................................................................................................................................................... 

தனிமை !


நீளமான மின் கம்பியில்
ஒரே ரெட்டைவால்குருவி
என்னைப் போலவே !

மேலும் படிக்க :

கவிதை மாதிரி ! 

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
...................................................................................................................................................................

நிலவே நீ ஒரு ...!


உனது பெயர்
சில ஆண்களுக்கும்
சில பெண்களுக்கும்
உன்னைப்பற்றி எழுதாத
இலக்கியமுமில்லை
அறிவியலுமில்லை
 நீயில்லாவிட்டால்
ஜோதிட உலகமே
இயங்காது
இரவுகள் உனக்கானவை
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நிரந்தரமல்ல
கற்றுத்தருவது நீ தான்
வர்ணிக்கப்படுகிறாய்
ஆண் என்றும்
பெண் என்றும்
உண்மையில்
நிலவே நீ ஒரு
திருநங்கை !

மேலும் படிக்க : 

கவிதை மாதிரி !

 நாமெல்லாம் குற்றவாளிகளே !
....................................................................................................................................................................

Sunday, January 1, 2012

கவிஞர்களே இவ்வருஷம் - எழுத்தாளர் சுஜாதா !

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

கவிஞர்களே !  இவ்வருஷம்  குறைத்துக்  கொள்வோம்
                   கவிதைகளில்  தேன்தடவல்  நிறுத்திக்  கொள்வோம்
செவிகளுக்கு  இனிமைதரும்  செய்யுள்  வேண்டாம் 
                   சினிமாவுக்(கு)   எழுதிவரும்  பொய்கள்  வேண்டாம் 
உவமைகளைத்  துப்புரவாய்  நீக்கிப்  பார்ப்போம்
                   உலகத்தைத்  திருத்துவதைப்  போக்கிப்  பார்ப்போம்
சிவபெருமான்,  சீனிவாசர்  முருகன்  மீது
                   சீர்தளைகள் தவறாத கவிகள் போதும் ...

அரசியலில்  மாறுதலைச்  சாட  வேண்டாம்
                  ஆளுநர்கள்,  முதல்வர்களைப்  பாட  வேண்டாம்
பரிசுதரும்  தலைவர்களைத்  தேட  வேண்டாம்
                   பட்டிமன்றம்  கவிராத்திரி  கூட  வேண்டாம்
வரிச்சுமைகள்,  பெண்ணுரிமை,  தமிழின்  இனிமை
                  வாரொன்று  மென்முலைகள்,  வளையல் சப்தம்
முரசறைந்த   பழந்தமிழர்  காதல்,  வீரம்
                   முதுகுடுமிப் பெருவழுதி எதுவும் வேண்டாம் ...

இத்தனையும்  துறந்துவிட்டால்  மிச்சம்  என்ன
                   எழுதுவதற்கு  என்றென்னைக்  கேட்பீர்  ஆயின்
நித்தநித்தம்  உயிர்வாழும்  யத்த  னத்தில்
                  நேர்மைக்கும்  கவிதைக்கும்  நேரம்  இன்றி
செத்தொழியக்  காத்திருக்கும்  மனுசர்  நெஞ்சின்
                  சிந்தனையைக்  கவிதைகளாய்ச்  செய்து  பார்ப்போம்
முத்தனைய *   சிலவரிகள்  கிடைக்கா  விட்டால்
                  மூன்றுலட்சம்  ' ராமஜெயம் '  எழுதிப்  பார்ப்போம் ..!

* ஒரே ஒரு உவமைக்கு மன்னிக்கவும் .
                                                                                                 - சுஜாதா
                                                                                                    14 - 4 -1991
                                                                                                   ஆனந்த விகடன் 

 நண்பர்களே இந்த செய்யுள் அல்லது கவிதை எழுதப்பட்ட வருடத்தைக் கவனிக்கவும் . 1991 !?

நன்றி - ஆனந்த விகடன் .

மேலும் படிக்க :

2011 ம் வருடமும் சாமானியனும் ! 
.....................................................................................................................................................................

Friday, December 30, 2011

வரவு எட்டணா செலவு பத்தணா !

1967 ஆம் ஆண்டு கே .பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான " பாமா விஜயம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . கவிஞர் கண்ணதாசன் இந்தப்பாடலை எழுதியுள்ளார் . T.M.செளந்தர்ராஜன் , சுசீலா மற்றும் L .R .ஈஸ்வரி இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் .

பாடல் வரிகள் இன்றைக்கும் ஓரளவு பொருந்தும் . இன்றைய நிலையில் மாதம் 8000 ரூபாய் வருமானம் வந்தால் 10000 ரூபாய் செலவு வருகிறது . ஆடம்பரத்தை துறந்து எளிய வாழ்க்கை வாழ முடிந்தால் 8000 ரூபாயே அதிகம் தான் . மாதம் ரூபாய் 3000 சம்பாதிப்பதே சாதனை என்ற நிலையில் இருக்கும் குடும்பங்களும் நம் நாட்டில் தான் இருக்கின்றன என்பதை மறந்து விட முடியுமா ?

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது !
அய்யா நிம்மதி இருக்காது !

அளவுக்கு மேலே ஆசை வந்தால் உள்ளதும் நிலைக்காது !
அம்மா உள்ளதும் நிலைக்காது !

மேலும் படிக்க :

2011 ம் வருடமும் சாமானியனும் ! 

ஜம்புலிங்கமே ஜடாதரா ...! 
.................................................................................................................................................................... 

Wednesday, December 28, 2011

2011 ம் வருடமும் சாமானியனும் !

ஒரு சாமானியனின்  கவலைகள் என்பதா ,கேள்விகள் என்பதா ,ஆதங்கம் என்பதா ,இயலாமை என்பதா அல்லது அறியாமை என்பதா தெரியவில்லை .

  • ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன . ஆனால் , அதிகார மையங்களின் பிடியிலிருந்து மக்கள் இன்னும் வெளியே வரமுடியவில்லை . பிரதமர் ,முதல்வர் போன்ற மேல் நிலை ஊழியர்களிலிருந்து அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை சாமானிய மக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவே இருக்கின்றனர் . மக்களின் வரிப்பணம் தான் தனக்கு சோறு போடுகிறது என்ற மனநிலை அவர்களுக்கில்லை . சாமானியர்கள் மீது அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர்கள் காவல்துறையைச்  சேர்ந்தவர்கள் . பொய் வழக்கு ,லாக்கப் சித்திரவதை , தடியடி , துப்பாக்கிச்சூடு என்று சாமானியர்கள் மீது பாயும் அதிகாரத்தின் நீளம் அதிகம் . உலகமே அதிகார மையங்களின் கட்டுப்பாட்டிலே இருப்பதாகத் தெரிகிறது . உண்மையான மக்களுக்கான ஆட்சி எங்குதான் நடைபெறுகிறது ? யாராவது சொல்லுங்களேன் .

  •  லஞ்சம் ,ஊழல் என்பது மனித விலங்குகளின் ஜீனிலியே பதிந்துபோன விசயமாக மாறிவிட்டது . லஞ்சம் , ஊழல் குறைவான நாடு வேண்டுமானால் உலகில் இருக்கலாம் .ஆனால் , லஞ்சம் ஊழலே இல்லாத நாடு என்று ஒன்று உலகில் இருக்க வாய்ப்பில்லை.

  • அண்ணா ஹசாரே போராட்டத்தை ஒரு சில ஊடகங்கள் காந்தியவழிப் போராட்டம் , மக்களுக்கான போராட்டம் என்று சொல்கின்றன . இல்லை ,இது கார்பரேட் கம்பெனிகளின் போராட்டம் , மத்திய தர மக்களின் உடல் நோகா மெழுகுவர்த்தி போராட்டம் என்று வேறு சில ஊடகங்கள் ஏசுகின்றன . அதிகம் படிப்பறிவில்லாத என்னைப்போன்ற சாமானியர்கள்  எதை நம்புவது ?
  • அண்ணா ஹசாரே, எத்தனை முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாலும் வரிந்து கட்டிக்கொண்டு  ஆதரவு தரும் ஊடகங்கள் , இரோம் சர்மிளா , ஓடிஸா போஸ்கோ , பழங்குடியினர் ,கூடங்குளம் மற்றும் பல  பிரச்சனைகள் குறித்து வாயே திறக்காமல் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது .

  • சுயஒழுக்கம் என்பதை சட்டங்களால் உருவாக்க முடியாது . சிறந்த கல்விமுறையாலும் , சிறந்த குழந்தை வளர்ப்பாலும் மட்டுமே சுய ஒழுக்கத்தை உருவாக்க முடியும் . ஆனால் , இன்றைய கல்விமுறை கண்ணை மறைத்து , கடிவாளம் பூட்டிய குதிரையைப் போல கொள்ளுக்கும் ,புல்லுக்கும் ஓடுவது   போலவே உள்ளது .

  • இந்த வருடம் நடந்த ஆட்சிமாற்றம் எல்லோருக்கும் மகிழ்ச்சியே . பலன் ??? ஒரு நாடக நடிகர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார் , ஒரு சர்வாதிகாரி பதவியில் அமர்ந்திருக்கிறார் அவ்வளவுதான் . மக்களைப்பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் பிடிவாதமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன . பழையபடி காவல்துறை சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . சே ! இந்த முறையும் நம்ம ஓட்டு வேஸ்டு தானா ? எப்ப தான் நாம் போடும் ஓட்டுக்கான பலனை அனுபவிக்கப் போகிறோமோ ?

  • 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறைக்கு ஆளான தெற்கு சூடான் ஜூலை 9 , 2011 அன்று தனிநாடாக உதயமானது . ஈழம் எப்போது தனி நாடாவது ? சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை யார் மீட்டெடுப்பது ? ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை எப்படிப் போக்குவது ? உலகெங்கும் நடக்கும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை யார் தட்டிக்கேட்பது ?

  • இதுவரைக்கும் அணுஉலை பற்றிக் கவலைப்படாத நாடுகள் கூட புகுசிமா நிகழ்விற்குப் பிறகு அணுஉலை பற்றி அச்சமும் ,அணுவைப் பயன்படுத்துவதில் தயக்கமும் கொண்டிருக்கின்றன . எப்படிப் பார்த்தாலும் அணுசக்தி பூமிக்கு ஆபத்தானது தான் . 20 ஆண்டுகளுக்கும் மேலான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை கேலிப்பொருளாக்கி 5 மாவட்ட மக்களுக்காக கவலைப்படாமல் , 14000 கோடிக்காக மட்டுமே கவலைப்படுகிறது தற்போதைய காங்கிரஸ் அரசு . இதே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையுடன் ஒப்பிடும் போது இந்த 14000 கோடி மிகவும் சொற்பமானது . 

  • தொடர்ந்து இயற்கைக்கு எதிராக செயல்படும்வரை நமக்கு வீழ்ச்சிதான் . நமது செயல்பாடுகள் இயற்கையின் அனைத்து கூறுகளையும் பாதித்துவிட்டன . நம்மால் இயற்கையைக் கட்டுப்படுத்தவோ , வெற்றி கொள்ளவோ எப்போதும் முடியாது . விதவிதமான நோய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன . குறிப்பாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கட்டிகள் மற்றும் புற்றுநோய்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றன . மற்ற நாடுகளில் தடை செய்யப்பட மருந்துகள் இப்போதும் விற்பனை செய்யப்படுகின்றன . காரணம் ?

  • பிரிவினைவாத அரசியலின் பலிகடாவாக எப்போதும் இருப்பது சாமானிய மக்கள்தான் . ஜாதி அரசியல் ,மத அரசியல் , கட்சி அரசியல்  என்று பிரிவினைகளை உருவாக்கி தங்கள் ஆதாயத்திற்கு சாதாரண மக்களை முட்டாள்களாக்கி , உணர்ச்சிவசப்படவைத்து குளிர்காய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலையாகிவிட்டது . தமிழ்நாட்டுக்கும் , கேரளாவுக்கும் இடையிலான பிரச்சனையை தமிழர்களுக்கும் ,மலையாளிகளுக்கும் இடையிலான பிரச்சனையாக மாற்றிய பெருமை இரு மாநில அரசியல் கட்சிகளையும் , ஊடகங்களையுமே சேரும் . முன்பு , காவிரிப் பிரச்சனையில் கர்நாடகாவில் இருந்த தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் . கர்நாடகாவில் இருந்த தமிழர்கள் , தமிழர்கள் என்று அடையாளப்படுத்தவே பயப்பட்டனர் . ஆனாலும் , இன்றும் எத்தனையோ தமிழர்கள் பிழைப்புக்காக அங்கு வாழ்கின்றனர் . அதே பிழைப்புக்காக கர்நாடாக மக்களில் சிலர் இங்கும் வாழ்கின்றனர் . அதுபோல , இன்று சண்டை கட்டிக்கொண்டாலும் நாளை மலையாளிகள் தமிழ்நாட்டிலும் , தமிழர்கள் கேரளாவிலும் பிழைப்புக்காக வாழத்தான் போகின்றனர் .

  • இலக்கியம் படிக்க முயற்சி செய்யும் என்னைப்போன்ற பட்டிக்காட்டனுக்கு நிறைய கேள்விள் எழுகின்றன . அரசியல் கட்சிகள் எந்தப்பிரச்சனையிலும் ஒற்றுமையாக செயல்படுவதில்லை என்று விமர்சிக்கும் எழுத்துலகம் , அரசியல் கட்சிகளை விட அதிக பிரிவினைகளைக் கொண்டிருக்கிறது . எவ்வளவு முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர் ; நம் மண்டை காய்கிறது . இலக்கியம் என்றாலே பொது தானே அப்புறம் ஏன் பெண் இலக்கியம் , ஆண் இலக்கியம் , தலித் இலக்கியம் என்று ஏகப்பட்ட பிரிவினைகள் . இவ்வளவு வேறுபாடுகளை வைத்துக்கொண்டு  இந்த பிரிவினை இலக்கியங்களால் சமத்துவத்தை உருவாக்க முடியுமா ? முதலில் படைப்பு தான் பேசப்பட வேண்டும் . பிறகு தான் அதை யார் எழுதியது என்று பார்க்க வேண்டும் .பிரிவினைகளைப்  புறந்தள்ளி உலக இலக்கியங்களுக்கு இணையான தரமான இலக்கிய படைப்புகள் உருவாக்குவதை நோக்கியும் , சமூகத்தை சீர்படுத்துவதில் இலக்கியத்திற்கு இருக்கும் மாபெரும் பங்கை உணர்ந்தும் எழுத்துலகம் பயணிக்குமா ? 

  • சினிமாவில் இன்னும் அருவாள் தூக்கும் கும்பல் இடம்பெறுகிறது . அதிகபட்ச வன்முறைக்காட்சிகள் பார்ப்பவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்து மனதை மரத்துப்போகச் செய்கின்றன . சமீபகாலப் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன . கண்டிப்பாக 5 கும் மேற்பட்ட பாடல்கள் இருக்க வேண்டும் என்ற விதியை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் நிறைய இயக்குனர்கள் இல்லை . கதையை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் கடந்த 2 ஆண்டுகள் ஓரளவு வரவேற்பைப் பெற்று இருக்கின்றன . இது நல்ல விசயம் . " ஆரணிய காண்டம் " , "எங்கேயும் எப்போதும் " மற்றும் " பாலை"  இந்த ஆண்டின் சிறந்த படங்களாக இருக்கக்கூடும் .

  • இந்த ஆண்டு , உலக சாம்பியன் கபடிப்  போட்டியில்  ஆண்கள் பிரிவிலும் ,பெண்கள் பிரிவிலும் உலகக்கோப்பைகளை வாங்கி ஆட்டோவில் பயணித்து வீடு வந்து சேர்ந்தனர் ,இந்திய கபடி அணியினர் . மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது இந்தியா . எவ்வளவு பெரிய பிரச்சனையையும் மறக்கவைக்கும் சக்தி கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ளது .பெருமளவு மக்களின் பிடித்தமான பொழுதுபோக்காக இருப்பதும் அதுவே . இது அரசியல் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது .முதல் முறையாக பார்முலா ஒன் கார் பந்தயம் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது . மற்ற விளையாட்டுகள் பற்றி ஊடகங்களுக்கும் , நமக்கும் எந்தவித  கவலையுமில்லை . ஒலிம்பிக் பதக்கம் ???

  • ஒவ்வொரு ஆண்டும் விளம்பரங்கள் வாயிலாக நம் மூளை சலவை செய்யப்படுவதன் மூலம் நமது வீடுகளில் இறக்குமதியாகும் விதவிதமான  பொருட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . இந்தியா மிகப்பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது . சிறிய ,பெரிய எந்தக் குடும்பமாக இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் உணவிற்காக செய்யும் செலவைவிட மற்ற பொருட்கள் வாங்கவே அதிகம் செலவு செய்கிறது . 

  • இந்த ஆண்டில் தான் அனந்த பத்மநாபசாமி கோவில் , ஒரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளாக மாறியது . தங்கம் மட்டும் இன்று ஓட்டைக் காலணா போல புழக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால் தங்கத்திற்கு எந்த மதிப்பும் இருந்திருக்காது . தங்கம் , பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது மிகப்பெரிய சரித்திர நிகழ்வு . இன்று ,சாமானியன் தங்கம் வாங்க நினைப்பதே பெரிய சாதனை தான் . 

  • காலம், கொண்டாட்டத்திற்கு இடம் ஒதுக்கும்போதே  துயரங்களுக்கும் ,மரணங்களுக்கும் சேர்த்தே இடம் ஒதுக்குகிறது . மார்ச் 11 ,2011 அன்று ஜப்பானை உலுக்கிய சுனாமி இந்த ஆண்டின் துயரமாக பதிவாகியுள்ளது . ஜப்பானுக்கு சுனாமி ஒன்றும் புதிதல்ல . புகுசிமாவில் இருந்த அணுஉலைகள் பாதிக்கப்பட்டு , கதிர்கள் வெளியேறியது தான் கொடூரம் . இயற்கையால் பாதி அழிகிறது ,மனிதனால் பாதி அழிகிறது . இயற்கை  அழிவுகளில் நீடித்த பாதிப்புகள் இல்லை . மனிதனால் ஏற்படும் அழிவுகளால் நீடித்த பாதிப்புகள் உருவாகின்றன . மலேசியா வாசுதேவன் மரணமும், ஸ்டீவ் ஜோப்ஸின் மரணமும் இந்த ஆண்டின் மறக்க முடியாத மரணங்கள் . மரணங்கள் எங்கேயும் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன .ஆனால் , ஒரு சில மரணங்கள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன . காரணம் ? 

இவ்வளவுக்கும் மத்தியில் தொடர்ந்து வாழ நமக்கு சக்தி அளிப்பவை , இயற்கை மீதான பிடிப்பும் , நம்பிக்கையும் மற்றும் மற்றவர்கள் நம் மீது காட்டும் அன்பும் , நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் தான் .

ஆமாம் .2012 ல உலகம் அழியப் போகுதாமே !
2000 ஆண்டைப் போல 2012 ஆண்டும் சுவாரசியமாகி விட்டது . மனிதன் தொடர்ந்து இயங்க இந்த மாதிரியான சுவாரசியங்கள் அவசியமாகின்றன .

வலுத்தது நிலைக்கும் !

மேலும் படிக்க :

சுற்றுச்சூழல் 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
..................................................................................................................................................................... 

Monday, December 26, 2011

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!

முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது .1972 ஆண்டு வெளிவந்த " காசேதான் கடவுளடா ", AVM நிறுவனம் தயாரித்த  ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் . இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜம்புலிங்கமே ஜடாதரா.." என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும் . வாலியின் கவிவண்ணத்தில் பாடல் அவ்வளவு சிரிப்பு . இந்தப்பாடலை கி .வீரமணி ,கோவை சவுந்தரராஜன் மற்றும் தாராபுரம் சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர் .

     
முடிந்தால் இந்தத் திரைப்படத்தையே முழுமையாக பாருங்கள் .
அவ்வளவு சிரிப்பு ! 

மேலும் படிக்க :


நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! 


மெதுவான எளிய வாழ்க்கை !  
......................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms